
முத்தம்
நான்கு உதடுகளும்
ஒரு தலைப்புச் செய்தியை
வாசிக்கிறது
முத்தம்
புத்தகம் இல்லாமல்
வாசிக்கபடும்
நூலகம்
முத்தம்
திடமா
திரவமா
வாயுவா
இருபது நூற்றாண்டு காலமாக
நிகழ்த்தப்படும்
இதழாய்வு
முத்தம்
ரத்தத்தின் கைதட்டல்
முத்தம்
ஐந்து புலன்களும்
சேர்ந்து மணக்கும்
திரெளபதி
முத்தம்
தேனை ஊற்றிக்கொண்டே
தேனை உறிஞ்சிக்கொண்டே
கிட்டும்
இரட்டை அத்வைதம்
முத்தம்
அகத்தியப்பசி
முத்தம்
உதடு வக்கீல்கள்
சத்தமில்லாமல்
வாதாடும் வழக்கு
முத்தம்
குருதியைக்
கொதிக்கவைக்கும்
மலர் உலை
முத்தம்
இரண்டு ஓவியங்கள்
ஒன்றில் ஒன்றை
வரைந்து கொள்வதற்க்கான
வாய்ப்பு
முத்தம்
உயிருக்கு
ஓர் உயிர் அனுப்ப்பும்
ஈரத்தந்தி
முத்தம்
இரு உதட்டில்
இயற்றப்படுவது ஆகையால்
திருக்குறள்
முத்தம்
சல்லி நாளங்களிலும்
பயணித்து
அணுக்களை ஒளிரவிடும்
மின்சாரம்
முத்தம்
ஒரு விடுகதையை
எழுத வந்து
தொடர்கதையை எழுத
துவக்கி வைப்பது
முத்தம்
ஒரு ஜீவனின்
மொழியை
இன்னொரு ஜீவன்
மொழிபெயர்க்கிறது!!!
நன்றி
தபு சங்கர்





0 comments:
Post a Comment